
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் இந்தாண்டு தங்களது ஹோம் மைதானத்திலும் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளும் ஹோம் மைதானங்களில் தான் பயிற்சி முகாமையே தொடங்கியுள்ளனர்.
அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும், 15 ஆண்டுகளாக இன்னும் ஒரு கோப்பையை கூட ஆர்சிபி அணி வெல்லாமல் உள்ளது. எனவே இந்தாண்டு டூ பிளெசிஸ் தலைமையிலாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு பின்னடைவு ஏற்படும் வகையில் தான் நட்சத்திர வீரர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸை ரூ.3.2 கோடி கொடுத்து ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது. க்ளென் மேக்ஸ்வெல்லை போலவே அதிரடியும், ஆஃப் ஸ்பின்னராகவும் செயல்படுவார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச தொடரில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.