
பாகிஸ்தானுக்கு மற்றும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பொதுவான இடமான இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் தொடங்கும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பாகிஸ்தான் வெற்றி பெற்ற ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் ஆரம்ப முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் பவர் பிளே முடிந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற பாகிஸ்தானின் தரமான பவுலர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆப்கானிஸ்தானை வலுப்படுத்தினர். அதில் சற்று அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஆளாக சதமடித்து அசத்திய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான் 39.5 ஓவர்கள் வரை நின்று 227 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.