
தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . ஆசியக் கோப்பைக்கு தயாராகும் விதமாக நடைபெறும் இந்த ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி 300 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இருவரும் இணைந்து துவக்க விக்கெட்டிற்கு 227 ரன்களை சேர்த்தனர்.
இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஓபனிங் ஜோடி சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் ட்ராவஸ் ஹெட் ஜோடி 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 284 ரன்கள் குவித்தது சாதனையாக இருக்கிறது . இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.