
இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று பரிதாபமாக நாடு திரும்பி இருக்கிறது. ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு நேராக அங்கிருந்து இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாடி தோற்று நாடு திரும்பிய இந்திய அணி ஒருமாத காலம் ஓய்வில் இருந்தது!
இதற்கு அடுத்து ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையை வைத்துக்கொண்டு, அதற்கு அணியை தயார்படுத்தும் விதமாக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மற்றும் முழுமையாக ரோகித் சர்மா தலைமையில் சந்தித்து ஒன்றுக்கு பூஜ்ஜியம் எனக் கைப்பற்றியது. இதற்கு அடுத்து முன்னணி வீரர்கள் ஓய்வெடுக்க இளம் வீரர்களுக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு தரப்பட்டு இரண்டுக்கு ஒன்று எனத் தொடர் கைப்பற்றப்பட்டது.
இதற்கடுத்து நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு மூன்று என இந்திய அணி இழந்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா மூவரும் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு கிடைத்த நேர்மறையான விஷயங்கள் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.