
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய கூட வரவில்லை. இதையடுத்து, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இதே போன்று ஐபிஎல் தொடரில் பீல்டிங்கின் போது வலது காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய கேஎல் ராகுல், அதன் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட ஓய்விற்குப் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர்களைத்தொடர்ந்து ரிஷப் பந்தும் கார் விபத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து, தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் இத்தனை நாட்களாக பெங்களூருவில் பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்த நிலையில், அணியில் இடம் பெற்றுள்ளார்.