
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ரயில்வேஸ் - திரிபுரா அணிகள் தங்களது கடைசி லீக் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவ்ராஜ் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹிமான்ஷு சங்வான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ரயில்வேஸ் அணியில் அரிந்தம் கோஷ் 62 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ரயில்வேஸ் அணி 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திரிபுரா அணி தரப்பில் முராசிங் 5 விக்கெட்டுகளையும், பிக்ரம்ஜித் தெப்நாத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய திரிபுரா அணியில் சுதிப் சட்டர்ஜீ 95 ரன்களையும், சதிஸ் 62 ரன்களையும், அபிஜித் சர்கார் 48 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 333 ரன்களைக் குவித்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவராஜ் சிங், ஹிமான்ஷு சங்வான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ரயில்வேஸ் அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.