
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 30-வது போட்டி நேற்று மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதல் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கொல்கத்தா அணி பந்துவீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசித்தள்ளிய ஜாஸ் பட்லர் சதமடித்து அசத்தினார். பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, வேகமாக ரன்குவிக்கத் தொடங்கியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐய்யர் 85 ரன்கள் குவித்து அசத்தியபோதும் அந்த அணி சஹால் வீசிய 17ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 18ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி 20 ரன்களை குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.