
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஏ அணியானது இறுதிவரை போராடிய நிலையிலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அராஃபத் மின்ஹாஸ் 41 ரன்களையும், யாசிர் கான் 33 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அன்ஷுப் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.