
அரசியல் பிரச்சினைகளால் வீழ்ந்து கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல் எழுந்து வந்து கொண்டிருக்கிறது. வருமான ரீதியாகவும் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டான கிரிக்கெட்டில், ஒவ்வொரு அணியின் அடையாளமாகவும் ஒரு பேட்ஸ்மேன் தேவையாக இருக்கிறார்.
அவரது திறமை மற்றும் செயல்பாட்டின் வழியாகவே ஒரு அணி அடையாளம் காணப்படுகிறது. அந்தந்த அணியின் ரசிகர்கள் அந்தந்த பேட்ஸ்மேன் மூலம் தங்கள் நாட்டு அணி மீதான பெருமையை நிறுவுகிறார்கள். இந்த வகையில் சரிந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாபர் ஆசாமின் வருகை பெரிய புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் அந்த நாட்டின் தற்போதைய கிரிக்கெட் அடையாளமாக நிற்கிறார். அவர் வழியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பெருமை நிறுவப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பல நாடுகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யாத காரணத்தினால், வருமான ரீதியாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் பின்னடைவுகளை சந்தித்து வந்தது. தற்பொழுது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட ஆரம்பித்திருக்கின்றன. இதனால் பாகிஸ்தான் அணிக்கு வருமானமும் கொஞ்சம் உயர்ந்து இருக்கிறது.