
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆசிய கோப்பையில் 2 முறை சந்தித்த இவ்விரு அணிகளும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மோதின.
அதில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகளும் 2023இல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவது உள்ளது என்றாலும் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏனெனில் வரலாற்றின் 16ஆவது ஆசியக் கோப்பையை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் நிகழ்ந்த ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது என்று கடந்த மாதம் பிசிசிஐ செயலாளராகவும் இருக்கும் ஜெய் ஷா அறிவித்தார்.