ரஞ்சி கோப்பை 2022/23: அதிரடியில் மிரட்டும் ஜெகதீசன், சுதர்சன்; முன்னிலை நோக்கி தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் ஜெகதீசன் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசியதோடு, ஒரு போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதனால் ஜெகதீசன் மீதான எதிர்பார்ப்பு அடுத்தடுத்த தொடர்களில் அதிகரித்தது. அதேபோல் ஐபிஎல் மினி ஏலத்திலும் ஜெகதீசனை வாங்க பல்வேறு அணிகள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தன்மே அகர்வால் மற்றும் மிக்கில் ஜெய்ஷ்வால் ஆகியோரின் சதங்களின் காரணமாக 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் வாரியர் 5 விக்கெட்டுகளையும், விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Trending
தொடர்ந்து இரண்டாம் நாளின் உணவு இடைவேளைக்கு பின் தமிழக அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சாய் சுதர்சன் ஒருநாள் கிரிக்கெட் மனநிலையில் விலையாட, ஜெகதீசனோ டி20 கிரிக்கெட் மனநிலையில் வெளுத்து வாங்கினார். எந்த திசை பந்துவீசினாலும், எந்த வகை பந்து வந்தாலும், ஜெகதீசன் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் 35 ஓவர்கள் பேட்டிங் செய்த தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் சேர்த்துள்ளது.
இதில் ஜெகதீசன் 95 பந்துகளில் 116 ரன்கள் விளாசியுள்ளார். அதில் சிறப்பு என்னவென்றால் 116 ரன்களில் 84 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் சேர்த்துள்ளார். மொத்தமாக 16 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசியுள்ளார். மறுபக்கம் சாய் சுதர்சன் 115 பந்துகளில் 87 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
இதனால் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்திலும் ஜெகதீசன் மற்றும் சுதர்சனின் அதிரடி தொடரும் என்பதால், தமிழ்நாடு அணி இமாலய ரன்களை குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now