
இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்த தமிழ்நாடு அணி, 3 புள்ளிகளைப் பெற்றது. இதையடுத்து 2ஆவது ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொள்கிறது.
தமிழ்நாடு - ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆந்திர அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
அதன்படி களமிறங்கிய ஆந்திர அணியின் தொடக்க வீரர் உபாரா கிரிநாத் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் ரெட்டி - ஷிக் ரஷீத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் அரைசதம் கடந்தார்.