ரஞ்சி கோப்பை: தமிழக அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் குஜராத் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில், எலைட் பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், எலைட் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு- குஜராத் அணிகள் இடையேயான லீக் ஆட்டம் கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே குஜராத் 236 ரன்களும், தமிழ்நாடு 250 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 14 ரன் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய குஜராத் 2ஆம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களுடன் தடுமாறியது.
Trending
மூன்றாம் நாளான நேற்று சரிவில் இருந்து மீண்ட குஜராத் 312 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக மனன் ஹிங்ரஜியா 52 ரன்களையும், உமங் குமார் 89 ரன்களையும், ரிபல் பட்டேல் 81 ரன்களையும் அடித்தனர். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதன் மூலம் குஜராத் அணி 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிங்கிய தமிழக அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன் எடுத்தது. இதில் சாய் சுதர்சன் 18 ரன்களுடனும், கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணியின் வெற்றிக்கு இன்னும் 267 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி நாளான இன்று தமிழக அணி தொடர்ந்து விளையாடியது.
இதில் சாய் சுதர்சன் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின், கேப்டன் சாய் கிஷோருடன் ஜோடி அமைத்த பாபா இந்திரஜித் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் கிஷோரும் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக பிரதோஷ் பால் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால், தமிழக அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி தரப்பில் நக்வஸ்வல்லா 4 விக்கெட்டுகளையும், சிடன் கஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் குஜராத் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now