ரஞ்சி கோப்பை 2024: மும்பையிடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தமிழ்நாடு படுதோல்வி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. அதிலும் அந்த அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஜோடி சேர்ந்த ஹர்திக் தோமர் - ஷர்துல் தாக்கூர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பின்னர் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்திக் தோமர் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கிய ஷர்துல் தாக்கூர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் பின்னிலைத் தங்கியிருந்த மும்பை அணி இன்றைய நாளின் கடைசி இன்னிங்ஸில் அபார முன்னிலையைப் பெற்றது.
அதன்பின் 13 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் துஷர் தேஷ்பாண்டேவும் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையிக் ஆட்டமிழக்காமல் இருந்த தனுஷ் கோட்யான் 89 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களைக் குவித்து அசத்தியது. தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேகதீசன், சாய் சுதர்ஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தரும் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய பாபா இந்திரஜித் ஒருமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய பிரதோஷ் பால் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் கடந்திருந்த பாபா இந்திரஜித் 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சாய் கிஷோர் 21 ரன்களுக்கும், விஜய் சங்கர் 24 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now