
இந்தியாவில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி கருண் நாயரின் அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மத்திய பிரதேச அணியில் ஹிமன்ஷு மந்த்ரி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 126 ரன்களைச் சேர்க்க, மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலைப் பெற்று அசத்தியது.
அதிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ் ரத்தோட் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். இதில் யாஷ் ரத்தோட் 18 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 141 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய அக்ஷய் வாத்கர் 77 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். இதன்மூலம் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.