
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 24ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. அந்த போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக 2022 ஆசிய கோப்பையில் காயமடைந்து வெளியேறிய அவர் அதற்காக அறுவை சிகிச்சை கொண்டு முழுமையாக குணமடைவதற்கு முன்பாக குஜராத் தேர்தலில் மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதனால் அடுத்து நடைபெறும் பார்டர் – காவாஸ்கர் கோப்பையில் தேர்வாவதற்கு முதலில் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடி ஃபார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை நிரூபிக்குமாறு பிசிசிஐ அவருக்கு நிபந்தனை விதித்தது. அந்த சூழ்நிலையில் அவர் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுதர்சன் 45, பாபா அபாரஜித் 45, பாபா இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக்கான் 50 என முக்கிய வீரர்கள் தேவையான வீரர்களை எடுத்தனர். சௌராஷ்ட்ரா சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 1 விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தமிழ்நாட்டின் பந்துவீச்சை சமாளிக்க அணியின் தரமான பந்து வீச்சில் 192 ரன்களுக்கு சுருண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அதிகபட்சமாக ஜானி 49 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ்சில் களமிறங்கிய தமிழகத்தை தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்த ரவீந்திர ஜடேஜா வெறும் 133 ரன்களுக்கு சுருட்டினார்.