
விதர்பா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை 2024-25 இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 138 ரன்களையும், சதத்தை நெருங்கிய கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 86 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கேரளா அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களையும், சதத்தை நெருங்கிய கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.