
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், கருண் நாயரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இப்போட்டியில் சதமடிப்பார் எனா எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை டேனிஷ் மாலேவார் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர்.