
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களையும், கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 73 ரன்களை சேர்த்த கையோடு ஆர்யா தேசாய் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாஞ்சலுடன் இணைந்த மனன் ஹிங்ராஜியாவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த பிரியங்க் பாஞ்சல் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்தது.