
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆவது சீசனுக்கான காலிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கேரளா மற்றும் ஜம்மூ காஷ்மீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் மிடில் ஆர்டரில் கன்ஹையா வாத்வான் 48 ரன்களையும், நசிர் லோன் 44 ரன்களையும், சாஹில் லோத்ரா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் அணி முதால் இன்னிங்ஸில் 280 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேரளா அணி தரப்பில் எம்டி நித்தீஷ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கேரளா அணியில் சல்மான் நிஷார் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சல்மான் நிஷார் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், ஜலஜ் சக்சேனா 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர். இஇருப்பினும் கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.