
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ஏகப்பட்ட இளம் வீரர்களில் பிரித்வி ஷா முக்கியமான வீரர். இந்திய டெஸ்ட் அணியில் 2018ஆம் ஆண்டே இடம்பிடித்த பிரித்வி ஷா, காயம் காரணமாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார். மற்ற இளம் வீரர்களைவிட விரைவில் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் பிரித்வி ஷா.
அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்து சாதனை படைத்த வீரர் பிரித்வி ஷா. அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இவரை சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கவலை என்று புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் அவரது ஃபிட்னெஸ் பிரச்னையால் தனக்கான வாய்ப்பை இழந்தார். அந்த காலக்கட்டத்தில், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டனர்.
ஆனால் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததுதான். இயல்பாகவே மிகச்சிறந்த பேட்டிங் திறமையை கொண்ட அசாத்திய வீரர். அசாதாரணமான இன்னிங்ஸ்களை அவ்வப்போது ஆடி அசத்திவிடுவார். மிகத்திறமையான வீரராக இருந்தும் கூட, இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷாவுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் எத்தனையோ இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபோதிலும், பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.