
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய 6ஆவது லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஜார்கண்டை வெறும் 142 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக குசக்ரா 29, சடாப் நதீம் 27 ரன்கள் எடுக்க சௌராஷ்ட்ரா சார்பில் அதிகபட்சமாக சிராக் ஜானி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 578/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணிக்கு துவக்க வீரர் ஹர்விக் தேசாய் 85 ரன்கள் எடுக்க செல்டன் ஜாக்சன் 54 ரன்கள் குவித்தார். ஆனால் அவர்களை விட 4ஆவதாக களமிறங்கி ஜார்கண்ட் பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய மொத்த அனுபவத்தையும் காட்டிய நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா 30 பவுண்டரிகளுடன் இரட்டை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 243* ரன்கள் அசத்தினார்.