ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆகாஷ் ஆனந்த் சதமடித்ததுடன் 106 ரன்களையும், ஷர்தூல் தாக்கூர் 37 ரன்களையும், சித்தேஷ் லத் 35 ரன்னிலும், தனுஷ் கோட்டியான் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் மும்பை அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் பரத் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், யாஷ் ரத்தோட் மற்றும் அக்ஷய் வத்கர் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வத்கர் 52 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ் ரத்தோட் சதமடித்ததுடன் 151 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்களைக் குவித்தது. மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் மும்பை அணிக்கு 406 ரன்கள் என்ற இலக்கையும் விதர்பா அணி நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் ஆயூஷ் மத்ரே 18, சித்தேஷ் லத் 2, கேப்டன் அஜிங்கிய ரஹானே 12 ரன்களில் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மும்பை அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்டத்தை ஆகாஷ் ஆனந்த் 27 ரன்களுடனும், ஷிவம் தூபே 12 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஷிவம் தூபே 12 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 23 ரன்னிலும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆகாஷ் ஆனந்த் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷம்ஸ் முலானி 46 ரன்களையும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஷர்துல் தாக்கூர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 66 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மோஹித் அவஸ்தி 34 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 325 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் ஹர்ஷ் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த யாஷ் ரத்தோட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now