
பாகிஸ்தானுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது மற்றும் கடைசி போட்டி கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று லாகூர் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 8/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்த ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.