
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுமுதல் டெல்லியில் துவங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் வலை பயிற்சியின் போது திடீரென காயத்தால் அவர் விலகியதால் இந்த தொடருக்கு ரிஷப் பந்த் தற்காலிக கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவரது தலைமையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல இந்தியா தயாராகியுள்ளது. இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக சிறந்த ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா, பினிஷராக மிரட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்களும் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இருப்பினும் இதே ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராகுல் திரிபாதி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை கோபப்படுத்தியது. அவரை போலவே பேட்டிங்கில் 458 ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சன் கேப்டனாக 13 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது பலரையும் ஏமாற்றமடைய வைத்தது.