
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார் . அதன்பின் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த இந்த ஐந்து வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு இருமுறை சென்று டெஸ்ட் தொடரை வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றது. இங்கிலாந்தில் சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம், டி20 உலகக் கோப்பையுடன் முடிவடையவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.