
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பவுலிங் செய்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, உணவு இடைவேளைக்கு முன்பு 68 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்துவந்த ஆலிக் அத்தனஸ் 47 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தார். பின்னர் வந்தவர்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக 150 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. அஸ்வின் டெஸ்ட் அரங்கில் தன்னுடைய 33ஆவது 5- விக்கெட்ஸை கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை போல்ட் முறையில் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 95ஆவது முறையாக போல்டு செய்து விக்கெட்டை எடுத்திருக்கிறார். இதற்கு முந்தைய அதிகபட்சமாக 94 முறை போல்டு செய்து விக்கெடுகளை எடுத்த அணில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் 66 முறை போல்டு செய்துள்ள முகமது சமி இருக்கிறார்.