
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதன்படி இபோட்டியில் அவர் தனது ஒரே ஓவரில் நேஹல் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ பஞ்சாப் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 18 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.