
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நடைப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்றும் ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றி, ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணி தோல்வியடைந்த ஒரே ஒரு போட்டியிலும் கூட கடைசி பந்துவரை போரடியே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணியின் இந்த அபாரமான செயல்பாடுகளுக்கு அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துவருவதே காரணம். உதாரணத்திற்கு பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் உள்ளிட்டோரும் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.