தோனிக்கு இந்த கோப்பையை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மழையின் காரணமாக 15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட, சென்னை அணி கடைசி ஓவரில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு கேம் சேஞ்சிங் பவுலராக இருந்த மோஹித் சர்மா இன்றைய போட்டியில் தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் 27 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவை அவுட் ஆக்கியவர், இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்த பந்தில் அம்பதி ராயுடு, தோனி என அவுட் ஆக்கி சென்னையின் கோப்பை கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
Trending
கடைசி ஓவரையும் மோஹித் சர்மாவே வீசினார். வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட முதல் பந்தே யார்க்கர் வீசியவர், அடுத்த மூன்று பந்துகளையும் சிறப்பாக வீசி களத்தில் இருந்த தூபேவையும் ஜடேஜாவையும் திணறடித்தார். இறுதியில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை வர ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை ஐந்தாம் முறையாக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
வெற்றிக்குப் பின் பேசிய ஜடேஜா, "எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு. எனது சொந்த மக்களில் பலர் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக வந்துள்ளனர். உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர். சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும்.
இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆம் எதுவும் நடக்கலாம். மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர்.
ஸ்லோ யார்கர் பந்து வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன். இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்துகிறீர்களோ, அதை தொடருங்கள்" என்று மகிழ்ச்சி பொங்க பேசினார். இதுப்போக வெற்றி ரன்னை அடித்து ஓடிவந்த ஜடேஜாவை எம் எஸ் தோனி கட்டித்தழுவி தூக்கிய காட்ட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now