Advertisement
Advertisement
Advertisement

கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2023 • 22:37 PM
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி, தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாச் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உம்ரான் மாலிக் விளையாடும் அணியில் வாய்ப்பு பெற்றார். முகேஷ் குமார் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

Trending


ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை வீழ்த்தினார், இரண்டாவது விக்கட்டை தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டாக முகேஷ் குமார் வீழ்த்தினார். மூன்றாவது விக்கெட்டை ஷர்துல் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பந்தை கையில் எடுத்த இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் அமர்க்களமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரட்டை விக்கட்டை கைப்பற்ற, இன்னொரு பக்கம் குல்தீப் யாதவ் தனது பிரமாதமான சைனா மேன் பந்துவீச்சை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு க்ளூ இல்லாமல் செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் மட்டுமே தாக்குப்பிடித்து 45 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு முழுதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவின் சாதனையை முறியடித்தார். 44 விக்கெட்டுகள் உடன் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திலும், 43 விக்கெட்டுகள் உடன் கபில்தேவ் இரண்டாவது இடத்திலும், 41 விக்கெட்டுகள் உடன் அணில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்னி வால்ஸ் 45 விக்கெட்டுகள் உடன் இருக்கிறார். அச்சாதனையையும் ரவீந்திர ஜடேஜா இத்தொடரிலேயே முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement