
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 69 டெஸ்ட், 197 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடி 6ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 553 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசயில் முதலிடத்தில் ஜடேஜா நீடித்து வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ஜடேஜா, மூன்றாவது மற்றும் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங், அவரது மருமகள் ரிவாபா ஜடேஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், ரவீந்திர ஜடேஜா திருமணமாகி சில மாதங்களிலேயே எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், நனும் ரவீந்திர ஜடேஜாவும் பேசி சில ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தான் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.