
16ஆவது ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிவம் துபே 25 ரன்களும், கெய்க்வாட் 24 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 9 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.
இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருவரையும் தீபக் சாஹர் வெளியேற்றி அசத்தினார். அடுத்தடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே (27), ரிலே ரூசோ (35) மற்றும் அக்ஷர் பட்டேல் (21) ஆகியோர் ஓரளவிற்கு ரன் எடுத்தாலும், ஒருவர் கூட சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து அதிரடியாக விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.