
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்குகிறது. பொதுவாகவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில், இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் முந்தைய எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
இம்முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற முக்கிய வீரர்களுடன் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் ஆகியோரும் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.