ஐபிஎல் 2022: ஹர்சல் இல்லாததே தோல்விக்கு காரணம் - டூ பிளெசிஸ்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்சல் பட்டேல் விளையாடாதது பெங்களூர் அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக அந்த அணியின் கேப்டனான டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்.
15ஆவது ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 95* ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டூபிளசிஸ் (8) மற்றும் அனுஜ் ராவத் (12) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களத்திற்கு வந்த விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார்.
இதன்பின் களத்திற்கு வந்த கிளன் மேக்ஸ்வெல் (26), சபாஷ் அகமத் (41), சுயாஸ் பிரபுதேஸாய் (34) மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், பேட்ஸ்மேன்கள் இறுதி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்த தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், இந்த போட்டியில் ஹர்சல் பட்டேல் இல்லாதது பந்துவீச்சில் தங்களுக்கு பின்னடைவை கொடுத்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டூ பிளெசிஸ் பேசுகையில், “பந்துவீச்சில் முதல் 8 ஓவர்கள் எங்களுக்கு மிக சிறப்பாக அமைந்தது. 8 முதல் 14 ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டோம் ஆனால் சென்னை வீரர்கள் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். சிவம் துபே எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது போன்ற பெரிய இலக்கை துரத்தும் போது துவக்கம் சரியாக அமைய வேண்டும், ஆனால் நாங்கள் அதிலும் சொதப்பிவிட்டோம். சென்னை அணி சிறப்பாக பந்துவீசியது, தனது சுழற்பந்து வீச்சாளர்களை சென்னை அணி சரியாக பயன்படுத்தியது. விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது போட்டியை மாற்றியது, இருந்தபோதிலும் கடைசியில் நாங்கள் வெற்றிக்கு அருகில் வரை வந்தது எங்கள் பேட்டிங் ஆர்டரின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இருந்தது.
நிச்சயமாக இந்த போட்டியில் ஹர்சல் பட்டேலை நாங்கள் மிஸ் செய்தோம், அவர் இல்லாதது பந்துவீச்சில் எங்களுக்கு பின்னடைவு தான். போட்டி எப்படி இருந்தாலும் அதை தனது பந்துவீச்சின் மூலம் மாற்றக்கூடிய திறமை ஹர்சல் பட்டேலிடம் உள்ளது. ஹர்சல் பட்டேல் விரைவில் எங்களுடன் இணைவார் என நம்புகிறேன். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now