
அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட மற்ற அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, இந்த முறை இலகுவாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதற்கு சூர்யகுமார் யாதவும், விராட் கோலியுமே மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இருவருமே இந்த தொடரில் இந்திய அணிக்கான தங்களது பங்களிப்பை தங்களால் முடிந்ததை விட அதிகமாகவே செய்து கொடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் விதவிதமான ஷாட்களால் எதிரணி பந்துவீச்சாளர்களை சூர்யகுமார் யாதவ் திணறடித்து வருகிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 225 ரன்கள் குவித்து 193.96 என அசாத்திய ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளுக்கான நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரத்தையும் விரைவாகவே எட்டினார். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.