
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயிண்டன் டீ காக் தம்முடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய ரீசா ஹென்றிக்ஸ் 12 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக வந்த வேன் டெர் டுஷன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து விளையாடிய டீ காக் மிகவும் விரைவாக 50 ரன்கள் கடந்து சவாலை கொடுத்தார். அவருடன் மறுபுறம் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 3வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 60 ரன்கள் குவித்த போது ஷாகிப் அல் ஹசன் சுழலில் சிக்கினார். அந்த நிலையில் வந்த ஹென்றிச் கிளாசன் தம்முடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து வங்கதேச பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட குயிண்டன் டீ காக் சதமடித்து தென்னாப்பிரிக்காவை வலுப்படுத்தினார்.
மேலும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த அவர் இதையும் சேர்த்து 3ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் 3 சதங்கள் அடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சரித்திர சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் ஏபி டீ வில்லியர்ஸ் உட்பட வேறு எந்த தென் ஆப்பிரிக்க வீரர்களும் ஒரே உலகக்கோப்பையில் 3 சதங்கள் அடித்ததில்லை.