நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் - தகவல்!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி டி20 உலகக் கோப்பை முடிந்தபின் ஓய்வு பெறுகிறார். டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி விலகுகிறார்.
டி20 உலகக் கோப்பை முடிந்தபின் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும். புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிசிசிஐ அமைப்பைப் பொறுத்தவரை வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் தேவையில்லை, உள்நாட்டுப் பயிற்சியாளர்கள்தான் வீரர்களுடன் ஒத்துழைக்க முடியும், மனநிலையை அறிந்து செயல்பட முடியும் என நம்புகிறது. பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளே, விவிஎஸ் லட்சுமண் ஆகியோரிடம் பிசிசிஐ அமைப்பு பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Trending
ஆனால், டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த 4 நாட்களில் நியூஸிலாந்து இந்தியாவில் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது. ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றுவிட்டால் இந்திய அணிக்கு அந்த நேரத்தில் பயிற்சியாளர் இல்லாத சூழல் ஏற்படும்.
ஆதலால், புதிய பயிற்சியாளர் வரும் வரை இந்திய அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராகச் செயல்பட பிசிசிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தென் ஆப்பிரிக்கப் பயணம் வரை திராவிட் பயிற்சியாளராக நீடிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த தகவலில், “ இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை ராகுல் திராவிட் பயிற்சியாளராகத் தொடர அவரிடம் கேட்டுள்ளோம். குறைந்தபட்சம் தென் ஆப்பிரிக்கத் தொடர்வரை அவர் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
முழுநேரப் பயிற்சியாளராகத் தொடர ராகுல் திராவிட்டுக்கு விருப்பமில்லை. அவரின் குடும்பத்தாரைப் பிரிந்திருக்க நேரிடும் எனக் கருதுகிறார். ராகுல் திராவிட் எங்களின் கோரிக்கைக்குச் சம்மதிப்பார் என நம்புகிறோம். தென் ஆப்பிரிக்கத் தொடருக்குள் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபர் தேர்வு செய்யப்படுவார். அதுவரை தற்காலிகமாக இந்திய அணிக்குப் பயிற்சியாளராகத் தொடர திராவிட்டிடம் கேட்டுக்கொண்டோம். தேவைப்பட்டால் திராவிட்டுக்கு உதவியாக என்சிஏ அலுவலர்கள் உதவுவார்கள்” எனத் தெரிவித்தார்.
பிசிசிஐ சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு இன்னும் முறையான விளம்பரம் ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி, தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால், இந்திய அணிக்கு முழுநேரப் பயிற்சியாளராக விருப்பமில்லாமல் இருக்கும் ராகுல் திராவிட், என்சிஏ தலைவர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் திராவிட்டுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. இந்தியாவுக்கான இளம் வீரர்களை உருவாக்கிக் கொடுப்பதில் திராவிட் முக்கியப் பங்காற்றுகிறார் என்பதால், மீண்டும் என்சிஏ இயக்குநராக திராவிட் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now