
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில், பரபரப்பான குற்றச்சாட்டை வைக்கும் அளவுக்கான விஷயத்தையும் கொண்டிருக்கிறது. நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டியை இங்கிலாந்தும் வெல்ல நான்காவது போட்டியை மழை வெற்றி தோல்வி இல்லாமல் டிரா செய்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரை வெல்லவும் இங்கிலாந்து தொடரை சமன் செய்யவும் ஐந்தாவது போட்டியில் வாய்ப்பு நிலவியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 395 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் மீதி இரண்டு நாட்கள் இருந்ததால் முடிவு தெரியும் என்று உறுதியானது.
இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்ற போது மழை குறுக்கிட்டாலும் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பு இல்லாமல் 135 ரன்கள் எடுத்தது. இந்த நான்காவது நாளில் நடந்த ஒரு சம்பவம்தான் தற்பொழுது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது. என்ன சம்பவம் என்றால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 37ஆவது ஓவரின் போது மார்க் வுட் வீசிய பந்து உஸ்மான் கவாஜா ஹெல்மெட்டை தாக்கியது. இதன் காரணமாக பந்து அதன் வடிவத்தை இழந்து விட்டதாக கூறப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு பந்து கொண்டுவரப்பட்டது.