
ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் ஸ்டீவ் ஸ்மித், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9, 113 ரன்கள் அடித்து பல வரலாறுகளைப் படைத்திருக்கிறார். இதில் 37 அரைசதங்கள், 32 சதங்கள் அடங்கும். வெறும் 174 இன்னிங்சில் 9,000 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்து அதிவேகமாக ஒன்பதாயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
மேலும் தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். 2019இல் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு வந்து ஆஷஸ் தொடரில் விளையாடிய போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்காக ஓராண்டுகள் தடைக்காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், அதுவரை கண்டிராத அளவிற்கு பேட்டிங்கில் அசுர வேகத்தில் விளையாடினார்.
ஏழு இன்னிங்ஸ்கலில் 774 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். அதில் இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி கிட்டத்தட்ட 111 ஆகும். அதன்பின் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரிலும் அபாரமாக செயல்பட்டார். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஒரு சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.