
ஐபிஎல் வரலாற்றிலேயே இன்று பரபரப்பான சிறந்த ஆட்டம் ஒன்று நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் - முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இன்றைய ஆட்டத்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ரஷித் கான் அணியை வழிநடத்தினார்.
போட்டி தொடங்கியதும் சாஹா வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்க்க, சுப்மன் கில் நிதானமாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார். அபினவ் மனோகர் 14 ரன்கள் மட்டுமே சேர்க்க, தமிழக ஜோடி சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஜோடி மீண்டும் அணியை காப்பாற்றியது. சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்களை சேர்க்க, அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் 24 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குர்பாஷ் 15 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் ஜெகதீசன் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனையடுத்து இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது பழைய அதிரடியை காட்டினார். 40 பந்துகளை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர் 83 ரன்கள அடித்து வெளியேறினார். இதில் 5 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.