
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இதனால் 6/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தென்னாபிரிக்க பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புரட்டி எடுத்த சூரியகுமார் யாதவ் 3ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.