
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது அபிஷேக் போரலின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 32 ரன்களையும், ஷாய் ஹோப் 33 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 63 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இப்போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.