
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதன்படி இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை வநிந்து ஹசரங்கா வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட ஷிவம் தூபே முதல் பந்தில் பவுண்டரியையும் இரண்டாவது பந்தில் சிக்ஸரையும் பறக்கவிட்டு சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இதனால் செய்வதறியாமல் நின்றை வநிந்து ஹசரங்கா மூன்றாவது பந்தை அவுட் சைட் ஆஃபில் ஃபுல்லராக வீச அதனை எதிர்கொண்ட தூபே கவர்ஸ் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் அத்திசையில் இருந்த ரியான் பராக் யாரும் எதிர்பாரா வகையில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்ததுடன் தூபேவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில் ரியான் பராக்கின் இந்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.