அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி எந்தெந்த தொடர்களில் விளையாடப் போகிறது என்ற முழு விவரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 50 லீக் போட்டிகளை தாண்டியதால், அனைவரும் ப்ளே ஆஃப் சுற்றை எதிர்நோக்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகள் வரும் மே 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே இந்த தொடர் முடிந்தவுடன் ரசிகர்கள் அனைவரின் கவனமும் உலகக்கோப்பை மீது திரும்பிவிடும். ஏனென்றால் வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. அதற்கு தயாராகும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
Trending
ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் தென்னாப்பிரிக்க அணி ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் அயர்லாந்து செல்லும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டி ஜூன் 26 முதல் 28 வரை நடைபெறும்.
அயர்லாந்தில் இருந்து இந்திய அணி நேரடியாக இங்கிலாந்து பறக்கிறது. அங்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 3 டி20, 3 ஒருநாள் போட்டி, கடந்தாண்டு மிச்சம் வைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் ஆகியவை நடைபெறுகிறது. அங்கிருந்து நேராக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன் பிறகு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு வருகிறது.
இந்த தொடர்களுக்கு பின்னர் நேரடியாக ஆஸ்திரேலியாவில் நவம்பரில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும். இப்படி தொடர்ந்து அட்டவணைகள் உள்ளதால், வீரர்களுக்கு இடையிடையே ஓய்வுகள் தரப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now