
அபுதாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, கடந்த 2 போட்டிகளாகத் தன்னை ஒதுக்கிவைத்தது தவறு என்பதை அஸ்வின் நேற்று நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் ஏறக்குறைய 2 ஓவர் மெய்டன். அஸ்வினை விட நேற்று இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல்தான் விட்டுக் கொடுத்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின் டி20 ஃபார்மட்டுக்குத் திரும்பிய அஸ்வின் தன்னுடைய ஃபார்மை நிரூபித்தார். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் சென்று ஒரு போட்டியில்கூட அஸ்வினைக் களமிறக்கவில்லை, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்திலும் அஸ்வினைக் களமிறக்கவில்லை என்பது இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.