
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியை போன்று தடுமாறாமல் ஷாகின் அப்ரிடியின் பந்துகளை அசால்டாக பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசமும் அடித்தார்.
முதல் 26 பந்துகளை பொறுமையாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியின் மிக முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ஷாதப் கான் வீசிய அவரது முதல் ஓவரிலேயே 19 ரன்கள் குவித்ததோடு 42 பந்துகளில் அரைசதமும் அடித்தார். அரைசதம் அடித்தபின்பும் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா மொத்தம் 49 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த போது, ஷாதப் கானின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.