சிபிஎல் 2024: ஆரோன் ஜோன்ஸ், ரோஸ்டன் சேஸ் அதிரடியில் கோப்பையை வென்றது செயின்ட் லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கயானா அணிக்கு மொயீன் அலி - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் ரனக்ள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மொயீன் அலியும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Trending
இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையரும் 11 ரன்களையும் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கீமோ பல் 12 ரன்களையும், கெவின் சின்க்ளேர் 11 ரன்களிலும், ரெய்ஃபெர்ட் 13 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெப்பர்ட் - டுவைன் பிரிட்டோரியஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிரிட்டோரியஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. செயின்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஃபாஃப் டூ பிளெசிஸும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 3 ரன்களிலும், அக்கீம் அகஸ்டே 13 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, லூசியா கிங்ஸ் அணியானது 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். மேற்கொண்டு இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஜோன்ஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அணியையும் வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக் தொடரி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now