
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணி நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு 259 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனை படைத்து தொடரை சமன் செய்துள்ளது.
செஞ்சூரியனில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சரமாரியாக அடித்து நொறுக்கி 20 ஓவரில் 258/5 ரன்கள் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் (47) சாதனையை உடைத்த ஜான்சன் சார்லஸ் 10 பவுண்டரி 11 சிக்சருடன் 118 (46) ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து 259 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு 152 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்த குயின்டன் டீ காக் சதமடித்து 100 (44) ரன்களும் ரீசா ஹென்றிக்ஸ் 68 (28) ரன்களும் எடுக்க இறுதியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 38* (21) ரன்கள் விளாசி வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.