
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் கடந்த 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்று முன்னேறியுள்ளது. இதற்கு மாறாக 5 போட்டிகளிலும் தோல்வி கண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டியில் களமிறங்கியது.
யுபு வாரியர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் காரணமாக யுபி வாரியர்ஸ் அணியில் அலைஸா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா இருவரும் களமிறங்கினர். இதில், வைத்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர் அலைஸா ஹீலியும் ஒரு ரன்னில் வெளியேறினர்.
பின்னர், தஹ்லியா மெக்ராத் 2 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஓரளவு ரன்கள் சேர்த்த கிரண் நவ்கிரே, 22 ரன்கள் சேர்த்த நிலையில் நடையை கட்டினார். தொடர்ந்து, சிம்ரன் ஷேக் 2 ரன்னிலும் வெளியேறினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து யுபி வாரியர்ஸ் அணி தடுமாறியது. அப்போது தான் தீப்தி ஷர்மா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடி ரன்கள் குவித்தனர். எனினும், தீப்தி ஷர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கிரேஸ் ஹாரிஸ் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இவர், 46 ரன்களில் வெளியேறினார்.